பரவிய செய்தி :
திருவண்ணாமலை கிரிவலம் உள் சுற்றில் தென்பட்ட காட்சி

மதிப்பீடு :

விளக்கம் :
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மனித நடமாட்டம் பெருமளவில் குறைந்து உள்ளதால் விலங்குகள் மற்றும் பறவைகள் ஊருக்குள் நுழைந்து சுதந்திரமாக சுற்றிச் திரிவதாக பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின்றன.
இருப்பினும், அவ்வாறு பரப்பப்படும் புகைப்படங்கள் தவறானவையாகவோ அல்லது சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் நிலவும் ஊரடங்கால் திருவண்ணாமலை கிரிவல பாதையின் உள் சுற்றில் மயில்கள், பறவைகளின் நடமாட்டம் என இப்புகைப்படம் திருவண்ணாமலை பசங்கடா எனும் முகநூல் பக்கத்தில் பதிவாகி ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?

காடு போன்ற பகுதிக்கு நடுவே சாலையில் மயில்கள், கிளிகள் மற்றும் பிற பறவைகள் இருக்கும் புகைப்படம் ஊட்டி மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் எடுக்கப்பட்டதாக வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் ஃபார்வர்டு செய்யப்பட்டு உள்ளது.
சாலையில் இருக்கும் பறவைகளின் புகைப்படம் இந்தியாவில் நிலவும் ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்ததாக பல மொழிகளில், பல இடங்களை குறிப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள். புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019 செப் 3-ம் தேதி ayaz burio எனும் ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தானின் சிந்து பகுதியைக் குறிப்பிட்டு அதே புகைப்படம் பகிரப்பட்டு உள்ளது.

எனினும், 2019 ஜூன் 29-ம் தேதியே vama amav எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் புகைப்படத்தை ஒத்த புகைப்படம் பதிவாகி இருக்கிறது. அதில், பறவைகளின் நிலை மாறி இருந்தாலும் மரங்கள் மற்றும் சாலை போன்றவை வைரலாகும் புகைப்படத்தில் இருப்பதை போன்றே உள்ளது.
மேற்காணும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சண்டிகர் பகுதியை குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார்கள். ” chandigarh peacock ” போன்ற வார்த்தைகளைக் கொண்டு தேடிய பொழுது, 2018 பிப்ரவரியில் Pandora Dabba எனும் யூடியூப் சேனலில் சண்டீகரின் சட்பீர் பூங்காவில் எடுக்கப்பட்ட வீடியோ கிடைத்தது.

அந்த வீடியோவின் 3.20-வது நிமிடத்தில் சாலையின் நடுவே மயில்கள், பறவைகள் இருக்கும் காட்சி இடம்பெற்று உள்ளது. அந்த காட்சியில் இடம்பெற்ற பகுதியும், வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் பகுதியும் ஒன்றாக உள்ளது.
நமது தேடலில், கொரோனா ஊரடங்கு தருணத்தில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் நடமாடும் மயில்கள் என வைரலாகும் புகைப்படம் சண்டீகரின் சட்பீர் பூங்காவில் எடுக்கப்பட்டவை. சில ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட புகைப்படத்தை தமிழகத்தில் எடுத்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள்.