பரவிய செய்தி :
சிக்கனை விஞ்சும் லோகஸ்ட் 65. ராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனை. புரதச்சத்து மிகுந்துள்ளதால் அதிக வரவேற்பு !

மதிப்பீடு :

விளக்கம் :
ராஜஸ்தான் மாநிலத்தில் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம் பயிர்களை நாசப்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வெட்டுக்கிளிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அந்த வெட்டுக்கிளிகளை பிரியாணி செய்து ராஜஸ்தான் உணவகங்களில் விற்பனை செய்வதாக செய்தித்தாளில் வெளியான பகுதி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?
ராஜஸ்தானில் உள்ள உணவகங்களில் ” வெட்டுக்கிளி பிரியாணி ” செய்வதாக பரவும் தகவல் குறித்து தேடிய பொழுது, தமிழ் சமயம், தினகரன், ஏசியாநெட் உள்ளிட்ட இணையதளங்களில் வெட்டுக்கிளி பிரியாணி தொடர்பான வெளியான செய்தி கிடைத்தது. எனினும், பிற செய்தி ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியாகவில்லை.
ஆகையால், ஆங்கிலத்தில் ” Rajastan Locust briyani ” எனும் கீ வார்த்தைகளை கொண்டு தேடிய பொழுது ராஜஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை.

மாறாக, பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண பகுதியில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனை செய்வதாக 2020 பிப்ரவரி மாதம் english.newstracklive.com எனும் இணையதளத்தில் வெளியான செய்தி கிடைத்தது. அதேபோல், 2019 செப்டம்பர் மாதம் பாகிஸ்தானை சேர்ந்த thenews எனும் இணையதளத்தில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தர்பர்க்கர் பகுதியைச் சேர்ந்தவர்கள் உணவகங்களில் வெட்டுக்கிளிகள் மூலம் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை தயாரித்து விற்பனை செய்வதாக வெளியாகி இருக்கிறது.Advertisement


மேலும் உணவகத்தின் உரிமையாளர், வெட்டுக்கிளியைச் சமைப்பதற்கு முன் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் அதன் கால், இறக்கைகளை நீக்கிவிட வேண்டும் எனத் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. அதையே தமிழிலும் வெளியிட்டு உள்ளனர்.
2019 நவம்பர் 12-ம் தேதி ஏஎன்ஐ செய்தியில், ” கராச்சி மக்கள் வெட்டுக்கிளிகளை வைத்து பிரியாணி செய்யுமாறு சிந்து மாகாண அமைச்சர் பரிந்துரை செய்ததாக ” வெளியாகி இருக்கிறது. அந்த செய்தியிலும், சிந்து மாகாணத்தில் உள்ள தார் சாச்சாரோ பகுதியில் உள்ள உணவகத்தில் வெட்டுக்கிளி பிரியாணி மற்றும் அதன் மூலம் செய்யப்பட்ட உணவுகளை விற்பனை செய்வதாக இடம்பெற்று இருக்கிறது.
நம்முடைய தேடலில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி செய்வதாக வெளியான செய்தி தவறானது. கடந்த ஆண்டில் வெளியான செய்தியில் இருந்து பாகிஸ்தானின் சிந்து பகுதியில் உள்ள உணவகத்தில் வெட்டுக்கிளி பிரியாணி மற்றும் பிற உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. வைரல் செய்யப்படும் புகைப்படமும் பாகிஸ்தான் நாட்டின் செய்தியுடன் வெளியாகியதையும் அறிய முடிகிறது.
ஆதாரம் :
Thar residents make scrumptious locust biryani, curry dishes
Pakistan cooking locusts in biryani and eating them
Unable to tackle locust swarms, Sindh minister suggests Karachiites to make biryani of insects