பரவிய செய்தி :
அரிசி மூட்டையில் விஜயபாஸ்கர் படத்துக்கு கீழ், “நாளைய முதல்வர், டாக்டர் சி.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்” என்று அச்சிடப்பட்டுள்ளது.
மதிப்பீடு :

விளக்கம் :
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆதரவு இணையதளப் பிரிவினர் தமிழகத்தை விஜயபாஸ்கரின் மாநிலம் என்று குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டதாகவும் அதைத் தொடர்ந்து கட்சிக்கு சர்ச்சை வெடித்ததாகவும் கூறப்படுவது உண்டு.
அதிலும் குறிப்பாக விஜயபாஸ்கருக்கு தமிழக முதலமைச்சர் பதவி மீது ஆசை என்றும் அதனால் அவர் சில காலம் ஓரங்கட்டப்பட்டதாகவும் செய்திகள் பரவின. ஆனால், ‘’அப்படி எதுவும் இல்லை, முதலமைச்சர் உத்தரவு படி மாநிலம் முழுக்க உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள சென்றேன்,’’ என்று விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.
தற்போது, அவருக்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில் நாளை முதல்வர் என்று அவரே குறிப்பிட்டு நிவாரண உதவி வழங்கியதாக படம் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் விஜயபாஸ்கர் நாளைய முதல்வர் என்று குறிப்பிட்டு நிவாரண உதவிகள் வழங்கினாரா என்று அறிய, அமைச்சர் தரப்பைத் தொடர்புகொண்டு பேசினோம். இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம், அமைச்சர் அவ்வாறு குறிப்பிடவில்லை என்றனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் சமூக ஊடக பக்கங்களில் ஏதேனும் படம் கிடைக்கிறதா என்று பார்த்தோம். அப்போது நிவாரண உதவி அரிசி மூட்டை படம் எதுவும் இல்லை. மூதாட்டி உள்ளிட்ட பலருக்கும் விஜயபாஸ்கர் இந்த மூட்டையை வழங்கும் வீடியோ இருந்தது. அதிலும் தெளிவாக இல்லை.
செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடியபோது, நக்கீரன் இது தொடர்பாக வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், “அமைச்சர் விஜயபாஸ்கரை சுற்றி சுற்றி வரும் நாளைய முதல்வர் கிராபிக்ஸ் வாசகம்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். உள்ளே பார்த்தபோது, நாளைய முதல்வர் என்ற வாசகம் கிராஃபிக்ஸ் முறையில் சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். அதில் அசல் பை படத்தை குளோஸ்அப்-ஆக வைத்திருந்தனர். முழு பை தோற்றம் நமக்கு கிடைக்கவில்லை.
வேறு ஏதும் உறுதியான ஆதாரம் கிடைக்கிறதா என்று கண்டறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அ.தி.மு.க ஆதரவாளர்கள் அசல் படத்தை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
உண்மையா என்ன..?
விஜயபாஸ்கர் பெயருக்கு முன்பு நாளைய முதல்வர் என்று கிராஃபிக்ஸ் செய்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்படுவதாக வெளியான செய்தி கிடைத்துள்ளது.விஜயபாஸ்கர் வழங்கிய நிவாரண உதவி மூட்டையின் அசல் புகைப்படம் கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னை நாளை முதல்வர் என்று குறிப்பிட்டு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார் என்று பகிரப்படும் படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
ஆதாரம் :
tweet about vijaybaskar relief works