204 Views

கொரோனா வைரஸை அடுத்து இந்தியாவை வெட்டுக்கிளிகள் மிரட்டி வருகின்றன. இந்தியாவின் வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளை விரட்ட தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளால் பெரும் பயன் உள்ளதா என்பது தெரியாதநிலையில், அந்த தெளிப்பான்கள் விளைச்சலை பாதிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம் என பரவ தொடங்கியுள்ள வெட்டுக்கிளி படையெடுப்பு தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்புள்ளதா, அதை விரட்ட பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் என்னவாக இருக்கும் என விளக்கமாக தெரிந்துகொள்ள சென்னையைச் சேர்ந்த தாவரவியலாளர் நரசிம்மனிடம் பேசினோம். தமிழக அரசு மற்றும் தன்னார்வ குழுக்கள் என பலராலும் அங்கீகரிக்கப்பட்ட தாவரவியல் நிபுணர் நரசிம்மன்.

வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பில்லை என தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அறிவியல் ரீதியாக இந்த பூச்சிகளின் பரவல் தமிழகத்திற்குள் நுழையாது என்பதற்கு ஆதாரம் உள்ளதா?

இதுபோன்ற இயற்கை சீரழிவுகள் வரும்போது, கண்டிப்பாக தமிழகத்திற்கு ஏற்படாது என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் தற்போதுவரை ஏற்பட்டுள்ள தாக்கத்தை கொண்டு பார்க்கும்போது, வருவதற்கு வாய்ப்பில்லை என அனுமானம் செய்வதில் தவறில்லை. வராது என்பது எவ்வளவு சரியோ, அதேபோல, வருவதற்கு வாய்ப்புள்ளது என்பதும் சரிதான்.

ஜெய்ப்பூரில் வெட்டுக்கிளி

இரானில் தொடங்கி, பாகிஸ்தான் வழியாக, இந்தியாவிற்குள் நுழைந்துள்ள வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான் மாநிலத்தோடு அழிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பை பார்க்கும்போது, பிற மாநிலங்களிலும் கடுமையான தாக்கத்தை இவை ஏற்படுத்தியுள்ளன. வெறும் மூன்றுமாத காலம் மட்டுமே வாழும் ஒரு வெட்டுக்கிளி, சுமார் 90 முட்டைகளை மூன்று முறை உற்பத்தி செய்யும்.

சராசரியாக ஒரு வெட்டுக்கிளியால் சுமார் 270 வெட்டுக்கிளிகளை உற்பத்தி செய்யமுடியும். அதனால், முடிந்தமட்டும் பச்சையம் உள்ள எல்லா செடி, கொடிகளை தின்று பயணிக்கும் என்பதால், ஒரு மாநிலத்திற்கு வராது என உறுதியாகக் கூறமுடியாது.

வெட்டுக்கிளிகள் திடீரென இவ்வளவு மாநிலங்களில் பரவ காரணம் என்ன? பருவநிலை மாற்றத்தோடு தொடர்புடைய நிகழ்வா இது?

வெட்டுக்கிளிகளின் படையெடுப்புக்கு காரணம் பருவ நிலை மாற்றம் இல்லை. இதுபோன்ற பூச்சிகளின் தாக்குதல் ஒவ்வொரு ஆண்டும் நடப்பது இயல்புதான். தற்போது தாக்கியுள்ள டெஸெர்ட் லோகாஸ்ட் என்ற வகை வெட்டுக்கிளி ஒவ்வொரு 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும்.

வெட்டுக்கிளி
Image captionவெட்டுக்கிளி

இது இயல்பான ஒன்றுதான் என இதை கடந்துவிடமுடியாது. விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை இந்த வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது. இந்த பூச்சிகள் செல்லும் இடத்தில் உள்ள எல்லா பயிர்களையும் தின்று தீர்த்துவிடும். இந்த பூச்சிகளுக்கு சுவையை அறியும் தன்மை (Taste Bud)கிடையாது.

இதனால் வேப்பமரம் உட்பட எல்லா விதமான மரம், செடி, கொடி,பயிர் வகைகளை தின்றுவிடும். மிளகாய் பயிர்களுக்கு இவை கட்டுப்படுமா என்பதும் சந்தேகம்தான்.

பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி இந்த வெட்டுக்கிளிகளை அழிக்கும் முயற்சியில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்த பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்தமுடியும்?

பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் நன்மையைவிட தீமைதான் அதிகம். வெட்டுக்கிளிகளை ஓரளவு இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் சாகடித்தாலும், முழுமையாக பயிர்களை காப்பாற்ற முடியாது.

இந்த பூச்சிகள் பெரும் படைகளாக வருவதால், ஒரு பகுதியில் தெளிப்பான்களை கொண்டு விரட்டுவதால், சிறிய அளவிலான பூச்சிகளை மட்டுமே கொல்லமுடியும். அவை சேதப்படுத்திய பயிர்களை பயன்படுத்தமுடியாது. அதைவிட, இந்த பூச்சிகளை கொல்ல பயன்படுத்தும் மருந்து தெளிப்பான்களில் அதிக அளவில், மலாதியான்(Malathion) ரசாயன கலவை இருக்கும் என்பதால், இவை தெளிக்கும்போது மண்ணில், தண்ணீரில் கலக்கும்.

இந்த கலவை அடுத்த விளைச்சலை கடுமையாக பாதிக்கும். விவசாயிகளுக்கும் பெரிய நஷ்டத்தை வெட்டுக்கிளிகள் ஏற்படுத்துவது ஒருபுறம் என்றால், இந்த பூச்சிக்கொல்லிகளால் ஏற்படுத்தும் பாதிப்பு அதைப்போலவே மோசமானது.

Translate »