பரவிய செய்தி :

ராக் ஜான்சன் அறக்கட்டளை மூலம் 15400 டாலர் பரிசு தருவதாக பரவும் ஃபார்வர்டு செய்தி.
மதிப்பீடு :

விளக்கம் :
WWE பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பிரபலமாகி பின்னர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் ” தி ராக் ” எனும் தவானே ஜான்சன் மக்களுக்கு பணத்தை பரிசாக தருவதாக நீண்டகாலமாகவே சில ஃபார்வர்டு தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

15,400 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்துள்ளதாக தவானே ஜான்சன் அறக்கட்டளையின் இந்திய குழு எனக் கூறி கூப்பன் எண், தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மற்றும் இணையதள முகவரி உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும்,ரூபாய் இந்தியாவிற்கான கட்டணமாக 6500 செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள்.
இப்படி பரவும் ஃபார்வர்டு தகவல் அனைத்தும் மோசடி கும்பலால் உருவாக்கப்பட்டவையே. பணம் தருவதாக கூறி உங்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை வாங்கி ஏமாற்றி வருகிறார்கள். தவானே ஜான்சன் அறக்கட்டளையின் இணையதளம் என அளிக்கப்பட்டு உள்ள லிங்கில் சென்று பார்க்கையில் பரிசு தொகையை வென்றவர்கள் பட்டியலில் நடிகை சமந்தா உடைய புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள்.

2019-ல் மனீந்தர் சிங் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில், 9162851862 என்ற எண்ணில் இருந்து வந்த அழைப்பில் எனக்கு விழுந்த லாட்டரி தொகையை பெற 6,500 ரூபாயை அவர்கள் கொடுத்த அக்கவுண்டில் செலுத்துமாறு கூறியதாக ஆர்பிஐ, ஸ்டேட் பேங்க், சைபர்செல்இந்தியாவை டக் செய்து பதிவிட்டு இருந்தார். அவர் பதிவிட்ட எண்ணில் தற்போது வைரலாகும் 7764936921 என்ற எண் இடம்பெற்று உள்ளது. அதற்கு பதில் அளித்த எஸ்பிஐ, யாருக்கும் வங்கி விவரங்கள், ஓடிபி உள்ளிட்டவையை அளிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டது.
தி ராக் அல்லது தவானே ஜான்சன் மில்லியன் கணக்கில் டாலர் பணத்தை அளிப்பதாக கூறி எண்ணற்ற ஃபார்வர்டு செய்திகளை முகநூலில் பார்த்திருக்கக்கூடும். கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் உலாவி வருகின்றன. அவையனைத்தும் போலியானவை மற்றும் மோசடிக் கும்பலால் உருவாக்கப்பட்டவை. அவ்வாறு பரவும் இணையதள முகவரிக்குள் செல்கையில் உங்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி விவரங்களை பெற்று மோசடியில் ஈடுபடுகிறார்கள்.


நடிகர் தவானே ஜான்சன் பணம், கார் வழங்குவதாக உலக அளவில் பல போஸ்ட்கள் சுற்றி வருகிறது. சில ப்ளூ டிக் உள்ள முகநூல் பக்கத்திலும் கூட இதுபோன்ற பதிவுகளை காணலாம். சிலர் லைக், ஷேர்க்காக இதுபோல் பதிவிடுகிறார்கள், சிலர் மோசடி செய்யப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதையெல்லாம் உண்மை என நினைத்து மோசடியில் சிக்க வேண்டாம். தவறான செய்திகளை பகிர வேண்டாம், அதற்கு துணை போக வேண்டாம்.