169 Views

பரவிய செய்தி :

சமீபத்தில் இந்த டிக்டாக்கின் ஸ்தாபகர் Zhang Yiming பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது, இந்த app-ஐ வேலையில்லாதவர்களுக்கும், உதவாக்கரைகளுக்கும், செலவிட வசதியாக இருக்கும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்ததாகவும், ஆனால் இந்தியாவில் இவ்வளவு பேர் வேலையில்லாதவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கவில்லை என்றும் சொன்னார்.

மதிப்பீடு :

விளக்கம் :

இந்தியாவில் டிக்டாக் செயலியை 200 மில்லியன் பேர் ஆக்டிவ் ஆக பயன்படுத்தி வருகிறார்கள். 2019-ல் மட்டும் 5.5 பில்லியன் மணி நேரத்தை இந்தியர்கள் டிக்டாக்கில் செலவிட்டு உள்ளனர். அப்படி அதிக அளவில் டிக்டாக்கில் மூழ்கி இருக்கு இந்தியர்களை அந்த செயலியின் நிறுவனர் ஜாங் யிமிங் விமர்சித்து உள்ளதாக ஓர் தகவல் ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் பல வடிவங்களில் வைரலாகி வருகிறது.

Facebook link | archive link 

எந்தவொரு பிரபல நிறுவனத்தின் நிறுவனரோ அல்லது உரிமையாளரோ தங்களின் வாடிக்கையாளரை இதுபோன்ற முறையில் விமர்சிக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இதனால் தங்களின் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என அவர்களுக்கு நன்றாக தெரியும். மேலும், அவர்களுக்கு லாபம் மட்டுமே பெரிது. ஆகையால், பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மகிழ்ச்சி அடைவார்களே தவிர விமர்சிக்க வாய்ப்பில்லை.

டிக்டாக் செயலியை இயக்கி வரும் சீன நிறுவனமான bytedance நிறுவனத்தை ஜாங் யிமிங் 2012-ல் நிறுவினார். ஜாங் யிமிங் இந்தியாவில் வேலை இல்லாதவர்கள் அதிகம் இருப்பதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததாக சர்வதேச அளவில் தொடங்கி உள்ளூர் ஊடகம் வரை எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் மட்டுமே இந்த ஃபார்வர்டு செய்தி பல ஆண்டுகளாக பரவி வருகிறது.

2019-ல் பிசினஸ் இன்சைடர் செய்தியில், ” மிக நீண்ட காலமாக டிக்டாக் வீடியோக்களை நானே உருவாக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன், ஏனெனில் இது முக்கியமாக இளைஞர்களுக்கான தயாரிப்பு. பின்னர் அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களும் தங்களின் சொந்த டிக்டாக் வீடியோக்களை உருவாக்குவது கட்டாயம் என அறிவித்தது மட்டுமின்றி குறிப்பிட்ட அளவிற்கு லைக் பெற வேண்டும் எனக் கூறினோம். அவர்களும் அதிக ஈடுபாட்டுடன் செய்தனர். இது எனக்கான மிகப்பெரிய படி ” என சவுத் சீனா மார்னிங் போஸ்ட்க்கு அளித்த பேட்டியில் ஜாங் யிமிங் கூறியதாக வெளியிட்டு உள்ளனர்.

டிக்டாக் செயலியை இளைஞர்களுக்காகவே உருவாக்கி உள்ளதாக ஜாங் யிமிங் தெரிவித்த தகவல் கிடைத்தது. ஜாங் யிமிங் டிக்டாக் வீடியோவை வேலை இல்லாதவர்களுக்காக உருவாக்கியதாகவோ அல்லது இந்தியாவை விமர்சித்ததாகவோ தகவல்கள் ஏதுமில்லை. இதை நையாண்டிக்காக யாரேனும் பரப்பி இருக்கக்கூடும்.

இந்தியாவில் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை டிக்டாக் செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், டிக்டாக் செயலி மீது குற்றச்சாட்டுகளும், கண்டனங்களும் அதிகரித்தே வருகிறது. டிக்டாக் செயலி பயன்படுத்தும் நபர்கள் தங்களை பிரபலங்களாக நினைத்துக்கொள்கிறார்கள் .

டிக்டாக் செயலி மூலம் ஆபாசம், சாதி, மத வன்மத்தை வெளிப்படுத்துவது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, ரவுடித்தனம் போன்ற தவறான செயல்களும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து கண்டனக்குரல்களும் எழுகின்றன. சமீபத்தில் பெண்கள் மீதான ஆசிட் வீச்சை சரியென கூறுவது போன்று ஒருவர் வெளியிட்ட வீடியோ அதிகம் வைரலாகி கண்டனத்தை பெற்றது. ஒருகட்டத்தில் கூகுள் ப்ளேஸ்டோரில் டிக்டாக் செயலியின் ரேட்டிங்கை 2 ஆக குறைத்தனர் நெட்டிசன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் :

Meet Zhang Yiming, the secretive, 35-year-old Chinese billionaire behind TikTok who made over $12 billion in 2018

Translate »