பரவிய செய்தி :
இந்திய ஒன்றியத்தின் பிரதமர் என்று பாராமல் இப்படியா மரியாதை கொடுப்பது. வங்காளத்து சிங்கத்தின் கெத்துனா கெத்துதான்.

மதிப்பீடு :

விளக்கம் :
மேற்கு வங்க மாநிலத்தில் ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட சென்ற பிரதமர் மோடியை வரவேற்கும் போது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வணக்கம் வைக்கவில்லை, மரியாதை கொடுக்கவில்லை பாருங்கள் என கீழ்காணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்காணும் வீடியோவில் விமானத்தில் இருந்து இறங்கி வரும் பிரதமர் மோடி முதல்வர் மம்தா பானர்ஜி நோக்கி வணங்கும் பொழுது அவர் கண்டுகொள்ளாதது போல் இடம்பெற்று இருக்கிறது. அவருக்கு அடுத்து நிற்பவர்கள் அனைவரும் வணங்கும் காட்சிகளும் பதிவாகி இருக்கிறது. வைரலாகும் வீடியோ குறித்து தேடிப் பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
வைரலாகும் வீடியோவில் ANI எனும் செய்தி முகமையின் லோகோ இடம்பெற்று இருக்கிறது. ஆகையால், பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு வருகை தந்த செய்திகளை ஆராய்ந்த பொழுது, 2020 மே 21-ம் தேதி ANI செய்தி முகமையின் ட்விட்டர் பக்கத்தில் கொல்கத்தா விமான நிலையத்தில் பிரதமர் மோடி வருகை தந்த முழுமையான வீடியோ வெளியாகி உள்ளது.
முதலில் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் ஜெகதீப் தஹார் பிரதமரை வரவேற்கும் போதும், தனக்கு பிரதமர் வணக்கம் வைத்த போதும் மம்தா பானர்ஜி வணக்கம் தெரிவித்து உள்ளதை காணலாம். மம்தா பானர்ஜியின் கையில் காகிதம் இருந்ததால் அவர் வணக்கம் வைத்தது போன்று தெரியாமல் இருந்து இருக்கலாம். மேலும், பிரதமர் மம்தா பானர்ஜியிடம் பேசிய பொழுது அதற்கு தனக்கே உரித்தான பாணியில் பதிலும் அளித்து உள்ளதை தெளிவாய் பார்க்கலாம்.
ANI வெளியிட்ட வீடியோவில் பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை வணங்கி விட்டு நகர்ந்து செல்லும் காட்சியில் இருந்து கட் செய்து மோடிக்கு மம்தா பானர்ஜி மரியாதையே அளிக்கவில்லை என தவறாக பரப்பி வருகிறார்கள்.
ஆதாரம் :
Cyclone Amphan: PM Modi Reaches West Bengal To Take Stock Of Ground Situation