பரவிய செய்தி :
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் டவுனில் ஜும்மா மசூதி தெருவில் கடந்த இரண்டு நாட்களாக, நள்ளிரவு 1 மணிக்கு நடு ரோட்டிலேயே சுமார் 700 நபர்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினர் உயரதிகாரிகளின் உத்திரவிற்கு கட்டுப்பட்டு, அவர்களுக்கு எந்த தொந்திரவும் மற்றும் அங்கு இரவு பணியில் இருக்கும் காவலர்கள் எவரும் தமது தொலைபேசியில் புகைப்படமோ அல்லது வீடியோவை எடுக்கக்கூடாது. என்ற உயர் அதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு கையை பிசைந்து நிற்கின்றனர். சம்மந்தப்பட்ட காவல்துறையை சேர்ந்த நண்பர் ஒருவரின் மனக்குமுறல்..

மதிப்பீடு :

விளக்கம் :
இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் நோம்பு இருக்கும் முஸ்லீம்கள் பொது இடங்களில் தொழுகை செய்ய வேண்டாம் என அறிவிப்புகளும் வெளியாகின. இந்நிலையில் திருப்பத்தூர் நகரத்தில் தினமும் நள்ளிரவில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கூட்டமாக தொழுகை செய்து வருவதாகவும், அதற்கு காவல்துறையின் உயரதிகாரிகளும் உடந்தையாக இருப்பதால் பணியில் இருக்கும் காவலர்களால் ஏதும் செய்ய முடியவில்லை என காவலர் ஒருவர் கூறியதாக ஓர் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
கடந்த ஆண்டே திருப்பத்தூர் பகுதி தனி மாவட்டமாக தமிழக அரசசால் அறிவிக்கப்பட்டது. இதை அறியாமல் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் டவுனில் நிகழ்ந்ததாக பரவும் செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்கள்.

அப்படி வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2018 மே 17-ம் தேதி alamy stock photo எனும் புகைப்பட தளத்தில் அப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. அதில், உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் பகுதியில் இரவு நேரத்தில் முஸ்லீம்கள் தொழுகை செய்யும் பொழுது எடுக்கப்பட்டது எனக் குறிப்பிட்டு உள்ளது.

விஜய் அஜய் என்பவரின் முகநூல் பக்கத்தில், அதே தகவல் உடன் alamy stock photo தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அந்த தளத்திற்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வைரல் செய்யப்படும் புகைப்படம் தவறானது என அறிய முடிந்தது. இருப்பினும், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்க தேடிய பொழுது செய்திகளில் அல்லது அதிகாரப்பூர்வ தளங்களில் திருப்பத்தூர் நகரில் முஸ்லீம்கள் கூடியதாக எங்கும் தகவல்கள் இல்லை.

இறுதியாக, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வைரலாகும் தகவலை மறுத்து ட்வீட் செய்து உள்ளது. அலகாபாத் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் திருப்பத்தூர் பகுதியில் எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்பட்டு வருகிறது. பொய்யான செய்தி பரப்புவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் நேரத்தில் தவறான தகவல்களையும், மதம் சார்ந்த போலிச் செய்திகளையும் பரப்புபவர்களை காவல்துறை கைது செய்து வருகிறார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.