பரவிய செய்தி :
இவர் மகளிர் இன்ஸ்பெக்டர் வந்தனா திவாரி அவர்கள், இவர் உத்திரபிரதேசம் ரபேளியில் கொரோனா வைரசுடன் பதுங்கியிருந்த தப்ளிக் ஜமாத் முஸ்லிம் குரூப்பாக இருந்தவர்களை பிடிக்கசென்றார், முஸ்லிம்கள் தாக்கியதால் உயிரிழந்தார்.

மதிப்பீடு :

விளக்கம் :
உத்தரப் பிரதேசத்தின் ரபேலி பகுதியில் கொரோனா வைரசுடன் பதுங்கி இருந்த தப்லீக் ஜமாத் முஸ்லீம் குழுவை பிடிக்க சென்ற மகளிர் இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் பெண் போலீஸ் தப்லீக் ஜமாத் முஸ்லீம்களால் தாக்கப்பட்டு இறந்ததாக தமிழில் பரவுவதற்கு முன்பே இந்தியில் வைரலாகி இருக்கிறது. அதில், போலீஸ் இரத்தத்துடன் இருக்கும் புகைப்படத்துடன், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவரின் மற்றொரு புகைப்படமும் இடம்பெற்று இருந்தது. அப்படி வெளியான பதிவு ஒன்றை ட்விட்டரில் உத்தரப் பிரதேச போலீசை டக் செய்து ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

உண்மை என்ன ?

இரத்த காயத்துடன் இருக்கும் பெண் போலீஸ் உடையில் இருக்கும் முத்திரை உத்தரப் பிரதேச போலீஸ் உடையதே. எனினும், இந்த புகைப்படம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரம் கிடைக்கவில்லை. தனிப்பட்ட முறையிலான எங்களின் தேடலில் பெண் போலீஸ் உடைய புகைப்படத்தின் தொடக்கம் கிடைக்கவில்லை.

அடுத்ததாக, உத்தரப் பிரதேசத்தின் பரெய்லியில் ஊரடங்கு நேரத்தில் வெளியில் சுற்றித் திரிந்தவர்களால் போலீசார் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. அதில், காவலர்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. எனினும், காவல்துறை தரப்பில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை.
தமிழில் போலீஸ் உடையில் இருப்பவரை வந்தனா திவாரி எனக் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியான பதிவுகளில் மருத்துவமனையில் காயத்துடன் சிகிச்சை பெற்று இருக்கும் பெண்ணை வந்தனா திவாரி எனக் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்தியில், ” உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு சென்ற மருத்துவர் வந்தனா திவாரி முஸ்லீம் ஜிகாதிகளால் தாக்கப்பட்டதில் கடுமையாக படுகாயமடைந்து இறந்ததாக ” பரப்பி இருந்தனர். ஆனால், அதும் தவறான தகவலே.

வந்தனா திவாரி மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிவ்புரி மருத்துவக் கல்லூரியில் மருந்தாளுனராகவும், பெண்கள் விடுதியை கவனித்துக் கொள்பவராகவும் பணியாற்றி வந்துள்ளார். அவர் ப்ரைன் ஹோமொர்ரேஜ் பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக bhopalsamachar இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், வந்தனா திவாரி குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவலை உத்தரப் பிரதேச போலீஸ் ட்விட்டரில் மறுத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அப்படியொரு சம்பவம் நிகழவில்லை என குறிப்பிட்டு உள்ளனர்.
நமது தேடலில் இருந்து, உத்தரப் பிரதேசத்தில் கொரோனா வைரசுடன் பதுங்கி இருந்த தப்லீக் ஜமாத் குழுவை பிடிக்கச் சென்ற மகளிர் இன்ஸ்பெக்டர் வந்தனா திவாரி தாக்குதலுக்கு உள்ளாகி இறந்ததாக பரப்பப்படும் தகவல் போலியானது என அறிய முடிகிறது.
ஆதாரம் :
Brain corpus to female corona fighter, not seen by doctors for 24 hours, went into coma. MP NEWS
Cop Injured In Attack While Enforcing Lockdown In UP’s Bareilly