பரவிய செய்தி :
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சாதுக்களை அடித்து கொன்ற கொடுரர்களை தர்ம அடி கொடுத்து கைது செய்த காவல்துறையினர்.

மதிப்பீடு :

விளக்கம் :
நம் டிவி, பாரத் மாதா கி ஜெய் ஆகிய இரு முகநூல் பக்கங்களில் ” மஹாராஷ்டிரா மாநிலத்தில் சாதுக்களை அடித்து கொன்ற கொடுரர்களை தர்ம அடி கொடுத்து கைது செய்த காவல்துறையினர் ” என கீழ்காணும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இரு பக்கங்களிலும் இவ்வீடியோ ஆயிரக்கணக்கில் ஷேர் ஆகி வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் 2 சாதுக்கள் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களால் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சம்பவம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாதுக்களுக்கு நிகழ்ந்த கொடுமை நாடு முழுவதிலும் கண்டனங்களை பெற்றது. மேலும், அச்சம்பவத்தை வைத்து வதந்திகளும் பரப்பப்பட்டன.
மேலும் படிக்க : இந்து சாமியார் முஸ்லீம்களால் அடித்து கொலையா ?| உண்மை என்ன ?
சாதுக்களை கொடூரமாக தாக்கி கொன்றவர்களை போலீசார் தர்ம அடிக் கொடுத்து வீதியில் இழுத்துச் செல்லும் காட்சி என வைரலாகும் வீடியோ குறித்து தேடிய பொழுது, வைரல் செய்யப்படும் வீடியோவிற்கும், சாதுக்கள் தாக்கி உயிரிழந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என தெரிய வந்தது.Advertisement
ஏப்ரல் 06-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா சேனலில், உத்தரப் பிரதேசத்தின் பரெய்லி போலீஸ் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்காத மக்கள் கூட்டத்தை அடித்து சென்றதாக வெளியான வீடியோவில் இடம்பெற்ற நபர்களும், காட்சிகளும் வைரல் செய்யப்படும் வீடியோ உடன் ஒன்றாக உள்ளன.

ஏப்ரல் 6-ம் தேதி நியூஸ் 18 இந்தி செய்தியில், ” உத்தரப் பிரதேசத்தின் பரெய்லி மாவட்டத்தில் உள்ள கர்மபூர் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்து அப்பகுதிக்கு சென்ற காவலர்கள் தாக்கப்பட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு எஸ்பி அபிஷேக் வர்மா தலைமையில் போலீஸ் குழு சென்ற பொழுது மீண்டும் தாக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில் பெரிய அளவில் போலீஸ் குவிக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் அடித்து இழுத்துச் சென்றதாக ” வெளியாகி இருக்கிறது.
மகாராஷ்டிராவில் சாதுக்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது ஏப்ரல் 17-ம் தேதி, உத்தரப் பிரதேசத்தில் ஊரடங்கை மீறி போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடித்து இழுத்துச் சென்றது ஏப்ரல் 6-ம் தேதி செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் சாதுக்களை அடித்து கொன்ற கொடூரர்களை தர்ம அடி கொடுத்து கைது செய்த காவல்துறையினர் என வைரல் செய்யப்படும் வீடியோ தவறானது என அறிய முடிகிறது.
ஆதாரம் :
Bareilly: A mob attacked the police team for following the lockdown, SP injured
Coronavirus scare: Crowd attacks Bareilly Police for enforcing a lockdown