பரவிய செய்தி :
மேற்கு வங்கம்.. ரூபாய் நோட்டுகளில் எச்சில் துப்பி சாலையில் வீசியுள்ளார்கள். யாரென்று முடிவு செய்யுங்கள் ?

Facebook link | archive link 1| archive link 2
மதிப்பீடு :

விளக்கம் :
கிஷோர் கே ஸ்வாமி என்பவரின் முகநூல் பக்கத்தில், மேற்கு வங்க மாநிலத்தில் ரூபாய் நோட்டுகளில் எச்சில் துப்பி சாலையில் வீசிச் சென்றுள்ளதாக வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
1.18 நிமிடம் கொண்ட வீடியோவில், காவல்துறையினர் மாஸ்க் மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டு சாலையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை எடுத்து ஒரு பையில் வைக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் வேளையில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூபாய் நோட்டுகளால் மக்கள் மத்தியில் அச்சம் உண்டாகி உள்ளது. இதை குறிப்பிட்ட சமூகத்தினர் உடன் தொடர்புப்படுத்தி பகிர்ந்து வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஆகையால், வீடியோ குறித்த தகவலை ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
” வைரலாகும் வீடியோ குறித்து தேடிய பொழுது ஏப்ரல் 16-ம் தேதி NDTV செய்தி இணையதளத்தில், ” மத்தியப் பிரதேச மாநிலத்தில் சாலையில் கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளால் அப்பகுதியில் பதற்றம் உருவாகியதாக ” வீடியோ உடன் செய்தி வெளியாகி இருக்கிறது. ஆக, சாலையில் பணம் கண்டெடுக்கப்பட்டது மேற்கு வங்கம் இல்லை, மத்தியப் பிரதேசம்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் பகுதியின் சாலையில் 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் கிடந்ததை அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் கண்டுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்த தகவலை அடுத்து அங்கு வந்த இந்தூர் ஹிரா நகர் போலீஸ் சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை பாதுகாப்பாக எடுத்து, பின்னர் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்துள்ளனர். எனினும், பணத்தினை உரிமைக்கோரி யாரும் வரவில்லை மற்றும் விசாரணை நடந்து கொண்டு இருப்பதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
” யாரேனும் ஒருவரிடம் இருந்து தவறுதலாக விழுந்ததா அல்லது வேண்டுமென்றே காரணத்துடன் சாலையில் பணம் வீசப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள அப்பகுதியைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிகளின் காட்சிகளை ஆராய்ந்து வருவதாக ” போலீஸ் அதிகாரி ராஜீவ் சிங் பதோரியா செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்து உள்ளதாக வெளியாகி இருக்கிறது. போலீஸ் அளித்த தகவலின்படி, சாலையில் கிடந்த பணத்தின் மதிப்பு ரூ.6480.
யூடர்ன் ஹிரா நகர் காவல் நிலையத்தின் அதிகாரி பதோரியாவை தொடர்பு கொண்ட போது, ” சாலையில் கிடந்த நோட்டுகளை உரிமைக்கோரி ஒரு நபர் முன்வந்துள்ளார். மக்கள் மத்தியில் பதற்றம் பரவிய நிலையில் பணம் தன்னுடையது என உரிமைக்கோரிய நபர் ராம் நரேந்திர யாதவ் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். எரிவாயு சிலிண்டரை விநியோகிக்க சைக்கிளில் செல்லும் போது அந்நபரின் பாக்கெட்டில் இருந்து ரூபாய் நோட்டுகள் கீழே விழுந்த சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளதை கண்டுள்ளோம். வழக்கமான நடைமுறைகள் முடிந்த பிறகு சாலையில் இருந்த பணம் தன்னுடையது என தாமாக முன்வந்த யாதவிடம் நாங்கள் ஒப்படைத்தோம் ” எனத் தெரிவித்து உள்ளார்.
சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூபாய் நோட்டுகளால் மக்கள் மத்தியில் பதற்றமான சூழல் உருவாகியது உண்மையே. ஆனால், அந்த ரூபாய் நோட்டுகள் தவறுதலாக ஒருவரிடம் இருந்து கீழே விழுந்து உள்ளது என இந்தூர் போலீஸ் அளித்த தகவலில் இருந்து அறிய முடிகிறது. இதை வைத்து குறிப்பிட்ட சமூகத்தினர் வைரசை பரப்புவதாக வதந்தியை பரப்பி வருகிறார்கள்.
நம்முடைய தேடலில், மேற்கு வங்கத்தில் ரூபாய் நோட்டுகளை எச்சில் துப்பி சாலையில் வீசிச் செல்வதாக கிஷோர் கே ஸ்வாமி பதிவிட்ட வீடியோ தவறான செய்தி என்பதை அறிய முடிகிறது.
ஆதாரம் :
Watch: Currency Notes Found On Roads In Madhya Pradesh Amid Lockdown, No Takers