446 Views

திருவள்ளூர் :

காய்கறிகளை பைக்கில் கொண்டு சென்ற விவசாயியைத் தடுத்து நிறுத்திய போலீஸ், அவரை 4 மணி நேரம் வெயிலில் காத்திருக்க வைத்தனர். தகவலறிந்ததும் போலீஸ் எஸ்.பி அரவிந்தன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ஆறுதல் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய பொருள்களை வாங்க மட்டும் மக்கள் வெளியில் வருகின்றனர். இந்தச் சூழலில் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே உள்ள அகரம் கண்டிகைப் பகுதியைச் சேர்ந்த விவசாயி கஜேந்திரன், திருநின்றவூரில் கடை வைத்துள்ளார்.

சாலையில் காய்கறிகளைக் கொட்டும் கார்த்திக்
சாலையில் காய்கறிகளைக் கொட்டும் கார்த்திக்

இவருக்கு சொந்தமான விவசாய நிலம், அகரம் கண்டிகை பகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் காய்கறிகள், கீரைகள் மல்லிகைப்பூ உள்ளிட்டவை விளைவித்து கடைக்கு எடுத்துச் செல்வது வழக்கம். கடந்த 13-ம் தேதி கஜேந்திரனின் மகன் கார்த்திக், காய்கறிகள், கீரைகளை பைக்கில் திருநின்றவூருக்கு கொண்டு சென்றார். தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் கார்த்திக் சென்றபோது வாகனச் சோதனயில் வெங்கல் காவல் நிலைய போலீஸார் அவரை வழிமறித்தனர்.

கீரைகளைக் கடைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை…!!!

அப்போது கார்த்திக், காய்கறிகளை கடைக்கு எடுத்துச் செல்வதாக போலீஸாரிடம் கூறியுள்ளார். கார்த்திக்கின் விளக்கத்தை இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீஸார் காதுகொடுத்து கேட்கவில்லை. மேலும் கார்த்திக்கை, அங்கிருந்து செல்லவும் அனுமதிக்கவில்லை. அதனால் கார்த்திக், காய்கறிகளோடு சுமார் 4 மணி நேரம் அதே இடத்தில் வெயிலில் நின்றுள்ளார். மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதியுள்ளதால் கடைக்கு காய்கறிகள், கீரைகளைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காய்கறிகளைக் கொட்டும் கார்த்திக்
காய்கறிகளைக் கொட்டும் கார்த்திக்

அதுகுறித்து போலீஸாரிடம் கார்த்திக் கூறியும் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போது போலீஸ் டி.எஸ்.பி மணிமேகலை வாகனத்தில் அவ்வழியாக வந்துள்ளார். அவரின் வாகனத்தின் முன், காய்கறிகள், கீரைகளைக் கார்த்திக் கொட்டியுள்ளார். அதைப்பார்த்த போலீஸார் அவரைக் கைது செய்து அவரின் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். நடுரோட்டில் போலீஸ் வாகனத்தின் முன் காய்கறிகள், கீரைகள் கொட்டப்பட்டதை சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர்.

பணம் வாங்க மறுத்த கார்த்திக்

அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவு செய்தனர். அந்த வீடியோவுக்கு பல கமென்ட்ஸ்கள் வந்தன. இதுகுறித்து திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தனுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அவர், சம்பவம் நடந்த இடத்தில் என்ன நடந்தது என்று விசாரித்தனர். பின்னர், அவர் கார்த்திக் வீட்டுக்கு நேரில் சென்றார். கார்த்திக்கைச் சந்தித்த எஸ்.பி அரவிந்தன், என்ன நடந்தது என்று கேட்டார்.

கார்த்திக் வீடு
கார்த்திக் வீடு

அப்போது கார்த்திக், நடந்த சம்பவத்தை எஸ்.பி-யிடம் விரிவாக விளக்கி கூறினார். உடனே போலீஸ் எஸ்.பி அரவிந்தன், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர், அவர் கொண்டு வந்த 2 மூட்டை அரிசி மற்றும் காய்கறிகளைக் கார்த்திக்கிடம் கொடுத்தார். நடுரோட்டில் வீசப்பட்ட காய்கறிகள், கீரைகளுக்கான பணத்தைக் கொடுப்பதாக எஸ்.பி அரவிந்தன் கூறினார். ஆனால், கார்த்திக் மற்றும் அவரின் குடும்பத்தினர் பணம் வாங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அப்துல் கலாமின் புத்தகத்தை கார்த்திக்கிடம் எஸ்.பி அரவிந்தன் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து எஸ்.பி அரவிந்தனிடம் கேட்டபோது, “காய்கறிகளைக் கொண்டு சென்ற கார்த்திக்கிடம் என்ன நடந்தது என்று விசாரித்தேன். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீஸாரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்துக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

புத்தகம் வழங்கும் எஸ்.பி அரவிந்தன்
புத்தகம் வழங்கும் எஸ்.பி அரவிந்தன்

கார்த்திக்கின் பதில்…

இதுகுறித்து கார்த்திக்கிடம் பேசியபோது, “சம்பவத்தன்று காலை 8 மணியளவில் தோட்டத்திலிருந்து காய்கறிகள், கீரைகளை திருநின்றவூருக்கு பைக்கில் எடுத்துச் சென்றேன். அப்போது, போலீஸார் என்னை வழிமறித்து ஊரடங்கு நேரத்தில் ஏன் வெளியில் வந்தாய் என்று கேட்டனர். அதற்கு காய்கறிகளை கடைக்குக் கொண்டு செல்கிறேன் என்று கூறினேன். ஆனால், போலீஸார் என்னை 4 மணி நேரம் அங்கேயே காத்திருக்க வைத்தனர். அதனால்தான் ஆத்திரத்தில் காய்கறிகளை நடுரோட்டில் வீசினேன். போலீஸ் எஸ்.பி அரவிந்தன் சார், நேரில் வருவார் என எதிர்பார்க்கவில்லை. அன்பாகவும் ஆறுதலாகவும் என்னிடம் பேசினார்” என்றார்.

நடவடிக்கை என்ன..?

இதுகுறித்து வெங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயவேலிடம் பேச பல தடவை முயற்சி செய்தோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிட தயாராக உள்ளோம்.

No Fields Found.
Translate »