பரவிய செய்தி :
சில நாடுகள் வைரஸ் சடலங்களை கடலில் வீசியுள்ளன. இனி மீன் சாப்பிட முடியாது. இந்த நாடு அழிந்துவிடும்.

மதிப்பீடு :

விளக்கம்
உலக அளவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரசால் இறந்தவர்களின் உடல்களை கூட குடும்பத்தினருக்கு அளிக்காமல் அரசே அடக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரசால் இறந்தவர்களின் சடலங்கள் கடலில் வீசப்பட்டுள்ளதால் இனி மீன்களை சாப்பிடக்கூட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக கடற்கரையில் சடலங்கள் குவிந்து இருக்கும் 30 நொடிகள் கொண்ட வீடியோ வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
உலகளாவிய நோய்த்தொற்றான கோவிட்-19 மூலம் இறந்தவர்களின் உடல்கள் கூட குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் அரசே எடுத்து அடக்கம் செய்கிறார்கள். அப்படி இருக்கையில், எந்த நாட்டிலும் இறந்தவர்களின் உடல்களை கடலில் வீச வாய்ப்பில்லை. அவ்வாறு செய்ததாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.
பரப்பப்படும் வீடியோ குறித்து தேடிப் பார்க்கையில், அந்த வீடியோவில் இருக்கும் சடலங்கள் கொரோனா வைரசால் இறந்தவர்களுடையது அல்ல மற்றும் அவ்வீடியோ 2017-ம் ஆண்டே யூடியூப் தளத்தில் வெளியாகி இருக்கிறது என்பதை அறிய முடிந்தது. 2017 அக்டோபர் 25-ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில் ” லிபியாவின் கடற்கரையில் ஒதுங்கிய குடிபெயர்ந்தவர்களின் உடல்கள் ” என இவ்வீடியோவின் முழுமையான காட்சிகள் பதிவாகி இருக்கிறது.

மத்தியத் தரைக் கடல் பகுதியின் வழியாக படகுகள் மூலம் பயணிக்கும் ஆப்பிரிக்க அகதிகள் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது, சிக்கிக் கொள்வது தொடர்ந்து நிகழ்கிறது. 2017-ல் அகதிகள் பயணித்த படகு விபத்தில் சிக்கி 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுபோன்ற விபத்துகள் லிபியா மற்றும் இத்தாலிக்கு இடைப்பட்ட பகுதிகளில் அதிகம் எண்ணிக்கையாக இருக்கிறது.
2017-ல் விபத்தில் சிக்கி லிபியாவின் ஜாவியா கடற்கரையில் ஒதுங்கிய அகதிகளின் உடல்களை கடற்கரை காவற்படையினர் அப்புறப்படுத்தும் காட்சிகள் அனைத்தும் முழுமையான வீடியோவில் இடம்பெற்று இருக்கும்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகம் நிலவும் நேரத்தில் தவறான மற்றும் போலிச் செய்திகளே சமூக வலைதளங்களில் அதிகம் ஆக்கிரமித்து உள்ளன. இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு செய்தியை ஒருமுறை மட்டும் ஃபார்வர்டு செய்யும்படி விதிமுறையை மாற்றியுள்ளது. மக்கள் பார்க்கும் செய்திகள் அனைத்தையும் உண்மை என பகிராமல் அவற்றின் நம்பகத்தன்மையை அறிந்து பகிரவும்.
No Fields Found.